
எலிபண்டா குகைகள், மும்பாய் கரைக்கு அப்பால், மும்பாய்த் துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள காராப்புரி (Gharapuri) தீவில் அமைந்துள்ளன. போத்துக்கீசர் இத்தீவுக்கு எலிபண்டாத் தீவு எனப் பெயரிட்டனர். 1987 ஆம் ஆண்டில் இக் குகைகள் யுனெஸ்கோ உலக பண்பாட்டுக் களம் என அறிவிக்கப்பட்டது. பல உள்நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இங்குள்ள சிற்பங்களைத் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு இலக்காகப் போத்துக்கீசர் பயன்படுத்தியதனால் பல சிற்பங்கள் சிதைக்கப்பட்டு உள்ளன.
இக் குகைகள் 9 தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு உட்பட்ட சில்காரா அரசர்களில் காலப் பகுதியைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இவ்விடத்தைச் சேர்ந்த சில சிற்பங்கள் ராஷ்டிரகூடர் காலத்தைச் சேர்ந்தவையாகவும் கருதப்படுகின்றன. எலிபண்டாவின் திரிமூர்த்தி சிலை எனப்படும் சிவன் சிலையின் மூன்று முகங்கள் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. இது ராஷ்டிரகூடர்களின் அரச சின்னமும் ஆகும். நடராசர், சதாசிவன் ஆகியோரின் புடைப்புச் சிற்பங்களும்,அர்த்தநாரீஸ்வரர் சிலைகளும் ராஷ்டிரகூடர் காலத்தைச் சேர்ந்த பிற கலைப் படைப்புக்களாகும்.
இக் குடைவரைக் கோயில் தொகுதி சுமார் 60,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்விடத்தில், அழகிய புடைப்புச் சிற்பங்களும், சிற்பங்களும், ஒரு சிவன் கோயிலும் உள்ளன. குகைகள் பாறையில் குடையப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment